தமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி: அரசியல் மருத்துவர்களின் ஆவேச மோதல்

அன்புமணி அபிமானிகள் பலரும் தமிழிசையின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்று தங்களது வழக்கமான பாஷையில் ரவுண்ட் கட்டுவது பாஜக.வினரை அதிர வைத்திருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன், அன்புமணி ஆகிய அரசியல் மருத்துவர்கள் இடையே ட்விட்டரில் மூட ஆவேச மோதல் அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன், மருத்துவர் அன்புமணி இடையே இதற்கு முன்பு பெரிதாக அரசியல் மோதல்கள் நடந்தது கிடையாது. மதுரை தோப்பூரில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்தான் இந்த மோதலுக்கு மையப்புள்ளி ஆகியிருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக.வின் மாநிலத் தலைவியான தமிழிசை செளந்தரராஜன் இது குறித்து நேற்று (ஜூன் 24) இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராதது ஏன்? நடுவண் அரசில் தொடர்ந்து இரண்டு முறை ரயில்வே இணை அமைச்சர்களைப் பெற்ற பாமக அப்போது தர்மபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றாமல் தற்போது ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

மருத்துவர் அன்புமணி உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பதில் அளித்தார். ‘மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008-ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி!’ என குறிப்பிட்ட அன்புமணி, தலையில் அடித்துக் கொள்வதுபோல ‘ஸ்மைலி’ வெளியிட்டு கலாய்த்தார்.

அன்புமணி இன்னொரு பதிவில், ‘மதுரைக்கு 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது!’ என அதே ஸ்மைலி எஃபெக்ட் சேர்த்து காய்ச்சினார்.

தமிழிசையும் இதற்கு சூடாக பதில் கொடுத்தார். ‘பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன் தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்தவமனையைக் கொண்டு வர முடியவில்லை என்று கேட்டால் தோப்பூரில் அடிக்கல் நாட்டியதையும் மதுரை ராஜாஜி மருத்தவமனைக்கு எய்ம்ஸ் அளவுக்கு உயர்த்த நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறீர்கள்.

அதன்பின்பும் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடரும் நீங்கள் எத்தனை முறை மதுரை எய்ம்ஸ் பற்றி பேசினீர்கள்? தர்மபுரிக்கும் எய்ம்ஸ் வேண்டும் என்றுதானே குழப்பினீர்கள்? அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள். நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை. சாதியை வைத்து சாதிக்கவில்லை.

சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் நாடெங்கும் பல தரமற்ற புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதிகள் வழங்கியதில் நீங்கள் காட்டிய வேகம் விவேகம் ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொணர காட்டவில்லை? மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்குக்காக இன்னமும் நீதிமன்றம் அலைவதும் மக்களுக்கு தெரியும்.

என் அரசியல் அனுபவம் 20 ஆண்டு கால முழுநேர அரசியல் பணி. என் உழைப்புக்கு கட்சி வழங்கிய அங்கீகாரம்தான் நான் படிப்படியாகப் பெற்ற பதவிகள். வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச்சுருட்டவில்லை. பதில் சொல்வதிலும் நாகரீகம் வேண்டும் என்பது தங்களுக்கும் உங்களுக்கு ஆதரவாகபதிவிடுவோருக்கும் தேவை.’ என தாறுமாறாக அன்புமணியையும் பாமக.வையும் போட்டுத் தாக்கினார் தமிழிசை.

தமிழிசை எழுப்பிய வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கோ, ஊழல் வழக்கு பற்றியோ அன்புமணி எதுவும் சொல்லவில்லை.

ஆனாலும் மத்திய அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு பணிகளை பட்டியலிட்டார். மேலும், ‘தமிழிசை கூறும் தருமபுரி-மொரப்பூர் இணைப்புத் திட்டத்திற்கும் பா.ம.க. அமைச்சர்கள் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பின்னர் அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தாததால், அதுகுறித்து வலியுறுத்த ரயில்வே அமைச்சர்களை கடந்த 4 ஆண்டுகளில் 16 முறை சந்தித்துள்ளேன்.

அண்மையில் நடந்த சந்திப்பின்போது மொரப்பூர் – தருமபுரி திட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இது கூட தெரியாதவர் தான் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்…. அய்யோ… அய்யோ!’ என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அன்புமணி இன்னொரு பதிவில், ‘தமிழிசை சவுந்தரராஜனின் அரசியல் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு தகவல்: 2002-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களே அவரது தொகுதியான லக்னோ ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை பா.ம.க. அமைச்சர் ஏ.கே. மூர்த்தியிடம் தான் ஒப்படைத்தார்; பணிகளை வியந்து பாராட்டினார்.

வாஜ்பாய் ஆட்சியிலும் பாமகவின் ஏ.கே. மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்தார். பா.ம.கவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு வாஜ்பாய் மீது சேறும், சகதியும் வீசிக்கொண்டிருக்கிறார் அரசியல் வரலாறு தெரியாத தமிழிசை சவுந்தரராஜன்.’ என்றார் அன்புமணி.

வாஜ்பாய் ஆட்சியை தொடர்புபடுத்தி அன்புமணி வைத்த விமர்சனத்திற்கு தமிழிசை பதில் அளிக்கவில்லை.

மாறாக, ‘அய்யா என்றுதான் மரியாதையுடன் அழைக்க என அய்யா சொல்லி வளர்ந்த எனக்கு தங்கள் பதிவில் உள்ள அய்யோ அய்யோ என நாகரீகமற்ற சொற்றொடர்களை கண்டதும் எங்களுக்கு இல்லாத பொது அறிவு தங்களுக்கு இருப்பதாக தாங்களே கூறிக்கொள்வது என்னை புல்லரிக்கவைக்கிறது. நன்றி!’ என கூறி முடித்தார்.

அரசியல் மருத்துவர்களின் ட்விட்டர் மோதல் இந்த அளவுடன் நேற்று இரவு நிறைவு பெற்றிருக்கிறது. இதன்பிறகு அன்புமணி அபிமானிகள் பலரும் தமிழிசையின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்று தங்களது வழக்கமான பாஷையில் ரவுண்ட் கட்டுவது பாஜக.வினரை அதிர வைத்திருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close