ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய என்னுடன் கைகோர்க்க வாருங்கள் என தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் பிரதமர் மோடி நேற்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டமானது தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்க உள்ளது. இந்த திட்டத்திற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் தான் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் மூலம் 50 கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள்.
அந்த விழாவில் பேசிய மோடி, "குடும்பத்தில் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் அந்த குடும்பமே மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவு தான். இதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இனி ஏழைகள் யாரும் மருத்துவ செலவிற்கு கடன் வாங்க தேவையில்லை. இந்தத் திட்டம் மேலும் மேம்படுத்தப்படும். தற்போது இத்திட்டத்துக்கு குறைவான பணமே ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜிடிபியில் இருந்து 2.5 சதவீத பணத்தை இத்திட்டத்துக்கு ஒதுக்கப்படும்" என்றார்.
தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம், இந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியை 2019-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் தெலங்கானா, ஓடிஸா, டெல்லி, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பிரதமரின் இத்திட்டத்தை நிராகரித்துவிட்டன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'இதைவிட சிறந்த மருத்துவ காப்பீடு திட்டம் எங்கள் மாநிலத்தில் உள்ளன' என்பதுதான்.