தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி:
சென்னை திருமுல்லைவாயில் அருகே தனியார் பள்ளியில் குமரி மக்களின் குடும்ப விழா ஒன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கேரளா வெள்ளம் பாதிப்பிற்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழிசை பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் திடீரென கூச்சலிட்டு கைத்தட்டினர். அந்த நேரத்தில் பேட்டியின்போது கைத்தட்ட வேண்டாம், இல்லையென்றால் மைக்கில் கேட்காது என்று செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.
உடனே அத்திரமடைந்த பாஜகவினர், செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க பாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களிடம் தமிழிசை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும் அவர்கள் கேட்கவில்லை.
இதனால் தமிழிசை பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டார். இதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் நடந்த விவரத்தை விளக்கும்போது, அருகில் இருந்த பாஜகவினர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். அப்பகுதியே இதனால் பதற்றத்துடன் காணப்பட்டது.