கடந்த சில தினங்களாக கிப்லி புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் கிப்லி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தயாராகும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க ஆட்சியை தக்கவைக்கவும்,, எதிர்கட்சியான, அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இடையில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யும், 2026 தேர்தலுக்காக தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தயார் செய்து வருகிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் நேரடியாக சென்று மக்களை சந்திப்பதை விட, அரசியல் தலைவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் மூலமாகவே மக்களின் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கள் எதை செய்தாலும், அதை தங்களது சமூகவலைதளங்களில் பதிவிடுவது, எதிர்கட்சிகளின் ஊழல் தொடர்பான ஆதாரங்கள், சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான கண்டனங்கள் என அனைத்துமே இப்போது சமூகவலைளங்களில் மூலம் தான் மக்களுக்கு தெரியவருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது கட்சியின் அணியில் ஐடி.விங் என்ற பிரிவை வைத்துள்ளது. இந்த வகையில் தற்போதைய சமூகவலைதள ட்ரெண்டிங் என்றால் அது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அனிமேஷன் திரைப்படங்களை தயாரிப்பதில் புகழ் பெற்ற ஜப்பானை சேர்ந்த கிப்லி நிறுவனம், தயாரிக்கும் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. அதேபோல் இதில் வரும் கேரக்டர்களும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கிப்லி புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஓபன் ஏ.ஐ. சாட் ஜிடிபியில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதில், கிப்லி அனிமேஷன் போல் தயாரித்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தால், ஏ.ஐ கிப்லி இமேஜ் போன்ற புகைப்படங்களை நமக்கு கொடுக்கும். இந்த டெக்னாலஜி தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருவதால், பலரும் தங்களது புகைப்படங்களை இந்த வகையில் மாற்றி சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கிப்லி ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார்.
இந்த கிப்லி தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, "தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை - எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.