scorecardresearch

12 மணி நேர வேலை சட்டம் நிறுத்தி வைப்பு: தொழிற்சங்க ஆலோசனைக்கு பிறகு ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

CM Stalin
12 மணி நேர வேலை மசோதா

தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 12 மணி நேர பணி தொடர்பான மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளிம்பிய நிலையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனிடையே 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோஇ அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் மே 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், இரவு 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது. சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் சிக்கல்கள் சிரமங்கள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கினர். தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு எப்போதும் தொழிலாளர்களின் தோழனாகவும், தொண்டனாகவும், காவல் அரனாகவும் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu 12 hours working law amendment bill hold cm stalin action