மதுரையில் ஆன்லைன் கேம்களின் தீவிர மோகம் காரணமாண 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மகன் ஹரிஹரசுதன் (17). 11-ம் வகுப்பு வரை படித்து வந்த இவர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், ஹரிஹரசுதன் தினமும் தனது செல்போனில் பப்ஜி, ஃபிரீ பையர் போன்ற ஆன்லைன் கேம்களை ஆடுவதில் முழுமையாக மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் தொடர்ந்து இது குறித்து கண்டிக்கவும், அவரை கேட்டுக்கொள்ளவும் செய்துள்ளனர். எனினும், சிறுவன் தனது பழக்கத்தை மாற்றாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். மொபைல் கேம்களில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஹரிஹரசுதன், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தனது செல்போனை தரையில் போட்டு உடைத்துவிட்டு, வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளார். அவர் தரையில் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சிறுவன் உயிரற்று கிடந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த தற்கொலைக்கு ஆன்லைன் கேம்களே முக்கிய காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மொபைல் கேம்கள் குழந்தைகளின் மனநிலையை எப்படி பாதிக்கின்றன? என்பதை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.