சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வட மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்ப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் ஏற்றுமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கை காரணமாக திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தரமணி 5சி பேருந்து நிலையம் பகுதியில், ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, தரமணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம், மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் பெயர் தைப்பூர் ரஹ்மான், பிரஃபுல்லா குமார் ஜெனா என்றும், இவர்கள் இருவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, இங்கு சென்னை ஐ.ஐ.டி மற்றும் ஐ.டி ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“