/tamil-ie/media/media_files/uploads/2023/07/Police-2.jpg)
நாகை மாவட்டத்தில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
நாகை மாவட்டத்தில் யாத்திரையின் போது, போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும், தமிழகத்தில் திமுக ஆட்சியை விமர்சித்தும் பேசி வருகிறார்.
அந்த வகையில் கடந்த மாதம் 27-ந் தேதி, இந்த பாத யாத்திரை பயணம் நாகப்பட்டினம் மாவடடத்தில் நடைபெற்றது. இந்த யாத்திரையின்போது பாஜக தொண்டர்கள் டெண்ட் அமைத்து வில் உறுப்பினர் சேர்க்கைக்காக நடவடிக்கைள் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது யாத்திரையின் பாதுகாப்பு பணியில் இருந்த வெளிப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவலர் சீருடையில் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் அதிகமாக வெளியானது. இதனைத் தொடர்ந்து, தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில், கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர், அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தார்களா என்பது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், ராஜேந்திரன், கார்த்திக்கேயன் இருவரும் பாஜகவில் இணைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக, தஞ்சை சரக டிஐஜி ஜெயசந்திரன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காவலர் சீருடையில் பாஜகவில் இணைந்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது அந்த 2 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.