பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓபிஎஸ் ஆலோசனை: அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு

பண்ணை வீட்டில்  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட்ட பல்வேறு மாவட்ட உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 28-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள்’ என குறிப்பிட்டார்.

இதனையடுத்து, 6-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி  தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் வெளியானது. அடுத்த முதல்வர் வேட்பாளரை நிர்ணயிப்பதில் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மிக முக்கியப் பங்கு வகிப்பதால் இந்த செய்தி அதிகமாக பேசப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக  அதிமுக தலைமைக் கழக ட்விட்டர் பக்கத்தில் இருந்து எம்.எல்.ஏ அழைப்பு குறித்த அறிவிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன.  எம்.எல்.ஏ கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் நேற்று தனது சொந்த ஊரான தேனி  பெரியகுளத்துக்கு பயணித்தார். இன்று, பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில்  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட்ட பல்வேறு மாவட்ட உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  மேலும், அதிமுக-வைச் சேர்ந்த  சில சட்டமன்ற உறுப்பினர்கள் தேனியில் முகாமிட்டுள்ளதாகவும், பன்னீர் செல்வத்தை சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த சந்திப்புகள் அனைத்தும்  பன்னீர்செல்வத்தின் கரங்களை வலுவாக்குகிறதா? அல்லது அவரை சமாதானம் செய்ய முனைகிறதா?  என்பது புரியாத புதிராகவே உள்ளது.  ஏனெனில், செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு  இருப்பதாக கருதப்படுகிறது. கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அதிகம் எனவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமா? துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அன்று சென்னையில்  இருப்பாரா? அனைத்து எம்.எல்.ஏ க்களின் ஆதரவு முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி அதிமுக வினரிடையே  எழுந்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu 2021 assembly election eps vs ops power tussle cm candidate name

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com