ஏப்ரல் 27 அன்று, கோயம்பேடு சந்தைக்கு அருகிலுள்ள சிகையலங்கார நிலைய உரிமையாளாருக்கு முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து, கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுநாள் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று, வரை மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 9,227 ஆகும். பிற நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 4,089 பேரும், மார்ச் மாதத்தில் நடைபெற்ற டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடோடு தொடர்புடைய 1,365 பேரும் இந்த மொத்த எண்ணிக்கையில் அடங்குவர். மீதமுள்ள, பெரும்பாலான எண்ணிக்கை (35% ) கோயம்பேடு சந்தைக் கிளஸ்டரோடு தொடர்புபடுத்துள்ளன.
ஏப்ரல் கடைசி வாரத்தில், கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதால், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய தொற்று பதிவாகியுள்ளது.
மூத்த பொது சுகாதார அதிகாரி இது குறித்து கூறுகையில்," சென்னை மட்டுமல்ல, அரியலூர், பெரம்பலூர் போன்ற பல மாவட்டங்கள் கோயம்பேடு சந்தை க்ளஸ்டரால் பாதிப்படைந்தன. உதாரணமாக, கொரோனா எண்ணிக்கை வெறும் 7ஆக இருந்த அரியலூர் மாவட்டத்தில், ஏப்ரல் 30 முதல் மே 12 வரையிலான காலகட்டத்தில் 192- ஆக உயர்ந்தது. ஆதே நேரத்தில், பெரம்பலூர் மாவட்டத்தின் தொற்று எண்ணிக்கை 9ல் இருந்து 192 ஆக அதிகரித்தது" என்று தெரிவித்தார்.
மேலும்,"மார்ச் மாத தொடக்க நாட்களில் இருந்தே, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ )கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்திருக்க வேண்டும். கொரோனா முடியும் வரை கோயம்பேட்டில் சில்லறை விற்பனை இல்லை என்று ஏப்ரல் 28ம் தேதி சிஎம்டிஏ எடுத்த நடவடிக்கை மிகவும் தாமதமான ஒன்று. அதேநேரம் கோயம்பேடு பூ மற்றும பழ சந்தைகள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டன. இதன் விளைவாக, திடீரென வேலையிழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெவ்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணப்பட்டனர் . இவர்கள் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் என்று யாரும் அப்போது கருதவில்லை, ”என்று அந்த அதிகாரி கருதுகிறார்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கொரோனா பாதிப்படைந்த 7,500 பேரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அனைத்து உடனடி தொடர்புகளுக்கும், கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்கு வழிவகுத்தன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சென்னையில், நோய்த் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் கடந்த திங்களன்று ஐந்து நாட்களாகக் குறைந்தது. மாநிலத்தின் பிற பகுதிகளில் இந்த காலம் 6 நாட்களாக உள்ளன. இந்தியாவில், கடந்த 14 நாட்களில், 11 நாட்களாக இருந்த நோய்த் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் , கடந்த 3 நாட்களில் 12.6 ஆக உயர்ந்துள்ளது. 64 இறப்புகளுடன் மாநிலத்தின் மரண விகிதம் ஒப்பிட்டு அளவில் மிக குறைவாக உள்ளது (.69% ). தேசிய சராசரி மரண விகிதம் 3.25 சதவீதமாக உள்ளது.
முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நோய் இருப்பவர்கள், சாரி (SARI) / ஐ.எல்.ஐ போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் கொரோனா தொற்று விகிதம் அதிகரிக்கும் போது இறப்புகளின் எண்ணிக்கை உயர்கிறது. நோய் தடுப்பு நடவடிக்கை இதனையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். கொரோனாவுடன் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது உண்மை தான், கை கழுவுதல், சுத்தமான பொது கழிப்பறைகளை போன்ற கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம்” என்று ஏப்ரல் 30ம் தேதி பொது சுகாதார இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கே.குழந்தைசாமி தெரிவித்தார்.
இதற்கிடையில், பீதி அடைய தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மாநிலத்தின் இறப்பு விகிதம், குணம் அடைபவர்கள் விகிதம் (27 சதவீதம்), கொரோனா சோதனை விரிவாக்கம் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டிய முதல்வர், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார். மேலும்,"நோய்த் தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்” என்ற நிபுணர்களின் கருத்தை மேற்கோள் காட்டினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாற்று இடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொள்ளுங்கள் என்று மார்ச் மாத நடுப்பகுதியிலே கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் வியாபாரிகள் சங்கம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர். மேலும் சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்த நெறிமுறையைப் பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.