தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.
இதனை அடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, 'என் மண், என் மக்கள் யாத்திரையின் மூலம் பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் குறைகளையும் ஊழல்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. வேல் யாத்திரையின் மூலம் எப்படி நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்களோ, அதே போல் இந்த யாத்திரையின் மூலம் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைவர் மத்தியிலும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இலவச வீடு திட்டம், இலவச கேஸ் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த பாரதத்தின் வளர்ச்சி என பிரதமர் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக, ஹாட்ரிக் சாதனையாக, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 'சிறு குறு தொழில்களுக்கு புகழ் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் அதிகமாக பயனடைந்த மாவட்டமாக கோவை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் உலகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன.
கோயம்புத்தூர் மக்கள் என்றைக்குமே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். உண்மையான அரசியல் சூழலை அறிந்து கொண்டு செயல்படுபவர்கள் கோவை மக்கள். 2024 ஆம் ஆண்டும் கோவை மக்கள் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்கள்.
கட்சியில் உழைப்பவர்களை கண்டறிந்து பொறுப்புகளை வழங்கும் கட்சியாக பாஜக உள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கட்சியில் உழைத்து பல்வேறு பதவிகளை அடைந்து இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல் வரும் தேர்தல்களில் பாஜக உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வரலாம். எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகிறது.
தமிழகத்தின் அரசியல் சூழல் மாறி வருவதை உணர முடிகிறது. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் மத்திய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனைவரையும் பாஜகவிற்கு வாக்களிக்க உழைக்க வேண்டும்' என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.