நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய மொபைல் ஆப் தொடங்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், வரும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள விஜய், கைவசம் இருக்கும் படங்களை நடித்து கொடுத்துவிட்டு அதன்பிறபு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து நாள்தோறும் பரபரப்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் ஆப் தொடங்கப்பட்டது. இதில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பலர் உறுப்பினர் ஆவதற்கு பதிவு செய்ய முயன்றதால், ஆப் திடீரென செயலிழந்தது. அதன்பிறகு சீர் செய்யப்பட்டு தற்போது இளைஞர்கள் பலரும் விஜயின் அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதனிடையே மொபைல் ஆப் தொடங்கி 3 நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 50 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளதாக கட்சியின் நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சேனல்கள் மூலமும், மொமைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தும் உறுப்பினராக இணைய வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“