அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது என் கையை யார் வெட்டுவது பார்ப்போம் என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் ஆவேச பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தில் நாளை மறுதினம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு, பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், அதிமுக கொடிகளையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்தி வருவதாக அதிமுக சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு ஓ.பி.எஸ்.,க்கு நெருக்கடியை கொடுத்தனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஃப்ளக்ஸ், பேனர்கள், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் நடப்பட்டுள்ள கொடி கம்பங்கள் ஆகியவற்றில் அதிமுகவின் கொடி மற்றும் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வமான கொடியில் மேலே கருப்பு, கீழே சிகப்பு, நடுவில் அண்ணாவின் உருவம் வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் இரட்டை இலை சின்னம் இருக்காது. ஆனால், அதிமுகவின் தேர்தல் சின்னத்தில் இரட்டை இலை மட்டும் இருக்கும். அதில் அண்ணாவின் உருவம் இருக்காது.

இந்நிலையில், நாளை மறுநாள் 24-ம் தேதி நடைபெறவிருக்கும் ஓபிஎஸ் தரப்பு பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றிலும் நடப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மேற்கண்ட அதிமுகவின் கொடியினிடையே வெள்ளை நிறத்தில் இரட்டை இலை சின்னம் அண்ணாவின் கைகளில் இருப்பதுபோல் அமைக்கப்பட்டு கொடிகள் பறக்கின்றன. எப்படிப் பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் பார்ப்பவர்களுக்கு அதிமுகவின் பொதுக்கூட்டம் போன்ற மாயையே இந்த இடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
அதிமுக தரப்பு கொடுத்த அழுத்தத்தால் நாங்கள் இப்படியான கொடியை உருவாக்கவில்லை. இந்த மாநாட்டிற்காகவே நாங்கள் இந்த கொடிகளை உருவாக்கியிருக்கின்றோம் என்று ஓபிஎஸ் தரப்பு மார்த்தட்டியிருக்கின்றது. இந்தநிலையில் இன்று மாநாட்டு பந்தலில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாநாடு நிச்சயமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீதி மன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை என்றார்.
மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி அவரே முடிசூட்டிக் கொண்டார். யார் வாக்களித்து தேர்ந்தெடுத்தது? கடந்த 40 ஆண்டுகளாக அதிமுக கொடியை என் கையில் பச்சை குத்தி இருக்கிறேன். யார் வந்து அழிப்பது? என் கையை வெட்டி எடுத்துவிட முடியுமா? வெட்டி எடுக்க யாராவது வருவாங்களா?” என ஆவேசமாகக் கூறினார்.

இரட்டை இலை ஏன்? : அதிமுக கொடியில் இரட்டை இலை சின்னத்தை சேர்த்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கு.ப.கிருஷ்ணன், “கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் 2 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். அவர்கள் அதிமுக வேட்பாளர்கள் என தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அவர்களுக்கு வாக்களிக்க நாங்கள் இங்கே இருந்து தூது விட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று மாநாட்டு திடலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை. சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை. கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை.
இது போன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமிக்கு தான் இரண்டாவது இடம் என ஆவேசமாக கூறினார். மொத்தத்தில் திருச்சி பொதுக்கூட்டம் எங்கிருந்து பார்த்தாலும் அதிமுக பொதுக்கூட்டமாகவே பிரம்மாண்டமாய் காட்சியளிக்கின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil