போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனிடம் நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை சொல்வது போன்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டெரர் வில்லனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் மன்சூர் அலிகான் தற்போது படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் பேசி வரும் இவர், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். தற்போது ஒரு சில படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் மன்சூர் அலிகான், அவ்வப்போது சில சர்ச்சையாக கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
இதனிடையே தற்போது அவரது மகன் அலிகான் துக்ளக் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த புகாரின் பேரில் அலிகான் துக்ளக் மற்றும் அவருடன் சேர்த்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போனில் இருந்து போதை பொருள் வியாபாரிகளின் செல்போன் நம்பரும் கைப்பற்றப்பட்டது. இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான அனைவரும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து போலீசாரின் வாகனத்தில் அமர்ந்திருந்த தனது மகனை சந்தித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ரொம்ப அழுகாத தைரியமா இரு, ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? சாப்டிய என்று மகனிடம் அறிவுரை கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“