தமிழ் திரையுலகினரின் போராட்டம் நிறைவு: 'ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்!' - சத்யராஜ் ஆவேசம்!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் திரையுலகினரின் போராட்டம் தொடங்கியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் போராட்டம் தொடங்கியது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடிகர்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, சிவகுமார், பொன்வண்ணன், நாசர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலகினர் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதிக்காததால், மதியம் 1 மணி வரை மட்டும் இப்போராட்டம் நடைபெறுகிறது.

மதியம் 01.10 – முடிவாக பேசிய சத்யராஜ், “நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்” என்றார்.

மதியம் 01.00 – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திரையுலகினர் நடத்திய மவுன அறவழிப் போராட்டம் நிறைவு பெற்றது. திரையுலகினர் போராட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

திரையுலகினரின் கையெழுத்துக்களைப்பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காலை 11.30 – ரஜினிகாந்த் போராட்ட மேடைக்கு வந்தார். இளம் நடிகர்கள் ரஜினியிடம் ஆசீர்வாதம் வாங்க முயல, ரஜினியோ இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பின், ரஜினியும், கமலும் அருகருகே அமர்ந்துள்ளார்.

காலை 11.15 – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 11.05 – போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்படுவதற்கு முன் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நாம் ஏழை விவசாயிகளுக்காகத் தான் போராடி வருகிறோம். சென்னையில் ஐபிஎல் போட்டிகளை அவர்களாகவே நிறுத்தினால் நல்லது. இல்லையெனில், வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாட வேண்டும். கர்நாடகாவில் என்னுடைய படம் ரிலீசாகவில்லை எனில், தயாரிப்பாளர்களும், அம்மாநில அரசும் அதை பார்த்துக் கொள்ளும். கமல்ஹாசன் என் எதிரி இல்லை. எவ்வளவு லட்சம் கோடி வருமானம் கிடைத்தாலும் பஞ்சபூதங்களை அழிக்கும் திட்டம் எதுவும் நமக்கு தேவையில்லை” என்றார்.

காலை 10.15 – நடிகர் தனுஷ் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

காலை 10.00 – நடிகர்கள் விவேக், செந்தில், பார்த்திபன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ.சி, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்ட பலரும் மவுன போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 09.30 – ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் காலை 11 மணியளவில் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 09.15 – போராட்டத்தின் போது பேசிய நாசர், “காவிரி மேலாண்மை வாரியம் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று கூடியிருக்கும் நிகழ்வு நமது கடமை. காவிரிக்காக சுயநலமற்று போராடி வரும் அனைவருக்கும் தமிழ் திரையுலகம் தலை வணங்குகிறது. மாநில அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது உரிமை; பேராசை அல்ல. மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசுகள் தீர்வு காணவேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதாலேயே போராட்டம்” என்றார். மேலும், இது ‘மவுன’ போராட்டம் என்றும் தெரிவித்தார்.

காலை 9.05 – நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, பொன்வண்ணன், நாசர், சிவகார்த்திகேயன் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

காலை 9.00 – காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் திரையுலகினரின் போராட்டம் தொடங்கியது. நடிகர் விஜய், போராட்டம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close