scorecardresearch

சுபயோக சுப தினம், சுப முகூர்த்தம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு: உதயநிதி பதவியேற்பு பற்றி கஸ்தூரி

நான் தனிப்பட்ட முறையில் இத்தகைய நல்ல நேரங்களை நம்பவில்லை. இருப்பினும், நான் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கிறேன்,

சுபயோக சுப தினம், சுப முகூர்த்தம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு: உதயநிதி பதவியேற்பு பற்றி கஸ்தூரி

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினின் மகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் அப்போது உதயநிதி பல படங்களில் நடித்து வந்ததால், படங்களை முடித்தவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திமுக மூத்த தலைவர்களும் அமைச்சர்களும், கழகத்திற்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழக்க முடிவு செய்து ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரின் கோரிக்கை ஏற்ற ஆளுனர் இன்று காலை 9.30 உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிபிரமானம் செய்து வைத்தார்.

இதனிடையே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  

டிசம்பர் 14, 2022. மிகவும் மங்களகரமான நாள், காலை 9.30 மணி சிறந்த சுப நேரம். அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு.

நான் தனிப்பட்ட முறையில் இத்தகைய நல்ல நேரங்களை நம்பவில்லை. இருப்பினும், நான் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கிறேன், அவர்களின் நம்பிக்கைக்காகவோ அல்லது மூடநம்பிக்கைக்காகவோ நான் அவர்களை சிறுமைப்படுத்த மாட்டேன். நான் இங்கு சுட்டிக் காட்டுவது திராவிட பாசாங்குத்தனம், உபதேசத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் பலரும் கஸ்தூரியின் பதிவுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu actress kasthuri twitter post about minister udhayanithi stalin