திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக வட இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திருப்பூர் கோயம்புத்தூர் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அதிகமான வடமாநிலை தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூரில் வடமாநிலை தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் சட்டசபையில், கடுமையான விவாதம் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான தமிழகத்திற்கு அனைத்து கட்சி குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் அம்மாநில முதல்வர் நித்தீஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அவர் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பான வெளியான வீடியோ போலி என்று தமிழக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்ட்டுள்ளது. இதில் வடமாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் காவல்துறை சார்பில் இந்தியில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் வடமாநில தொழிலாளர் இது குறித்து அச்சத்தில் இருந்து வரும் நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி விசாரிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில்,
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2023
கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/