என்னை பொய் சொல்லும் பெண் என்று சமூகத்தில் சீமான் அடையாளப்படுத்த நினைத்தால் இந்த போர் இப்போதைக்கு முடியாது என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீமானை கைது செய்ய வைக்கமால் நான் ஓயமாட்டேன் என்று விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த புகார் காரணமாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு காவல்துறை சார்பில் 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெறுவதாக அறிவத்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றிருந்தார்.
தோல்வியை ஒப்புக்கொண்டு தான் இந்த புகாரை வாபஸ் பெற்றதாகவும், தான் மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப சென்றுவிடுவதாகவும் நடிகை விஜயலட்சுமி கூறியிருந்த நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிந்தது என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் நடிகை விஜயலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் " சாட்டை முருகன் தான் ரூ.50 ஆயிரம் வழங்கி என்னை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார். எங்களை வீரலட்சுமியின் இடத்திர் அடைத்து வைத்திருந்தபோது சாட்டை துரைமுருகன் ஏற்பாடு செய்த வழக்கறிஞர் தான் எங்களை வெளியில் கொண்டு வந்தார். அதன்பிறகுதான் புகாரை வாபஸ் பெற்றேன். சீமான் நீங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள். நான் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு வந்து நிரூபிக்கிறேன்"
மேலும் என்னை பொய் சொல்லும் பெண் என்று சீமான் நிரூபிக்க முயற்சி செய்தால், இந்த பிரச்சனை இத்துடன் முடியாது என்று விஜயலட்சுமுி எச்சரிக்கை விடுக்கும் பாணியில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“