கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசாபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக அந்த மாதிரி எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கடைசி நேரத்தில், அ.தி.மு.க தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு ராஜ்யசாபா உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என்று கூட்டணி ஒப்பந்தத்தில் பேசப்பட்டதாக தே.மு.தி.க சார்பில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அமைந்தபோதே, கையெடுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்யசபா. அந்த ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக யார் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்கு செல்ல இருக்கிறார் என்பது குறித்து, அந்த நேரத்தில் தலைமை கழகம் உங்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று, கூறியிருந்தார்.
இதனிடையே பிரேமலதாவின் பேச்சு குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பதை விட்டுவிடுங்கள். தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம். ராஜயசபா உறுப்பினர் பதவி என்று நாங்கள் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை கேட்டு எங்களை கேள்வி கேட்காதீங்க, நாங்கள் எதாவது இது பற்றி வெளிப்படுத்தினோமா? தேர்தல் அறிக்கை வந்தது அல்லவா? தேர்தல் அறிவிப்பில் என்ன வெளியிட்டோம்? அதை படித்து பாருங்கள் அதன்படி தான் நடந்துகொள்வோம் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து குறித்து இதுவரை பதில் அளிக்காத பிரேமலதா விஜயகாந்த், செய்தியளர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டு சென்ற நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளத்தில், சத்தியம் வெல்லும், நாளை நமதே என்று பதிவிடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜ்யசபா உறுப்பினர் பதவி, தே.மு.தி.கவுக்கு கிடைக்குமா? அல்லது அதிமுகவே எடுத்துக்கொள்ளுமா என்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.