/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-13T153154.475.jpg)
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயப்பணி பாதிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் நிலத்தடி நீரை நம்பி மட்டுமே இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள், பாசனத்தில் மின் மோட்டார்களை நம்பி இருக்கின்றனர்.
தற்போது விவசாயத்திற்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல், முறை வைத்து வழங்கப்படுகிறது. அதிலும், பல நேரங்களில் "லோ வோல்டேஜ்" மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின்மோட்டார்கள் பழுதடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் கண்முன்னே பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி இருந்தால், நீர்நிலைகளில் மழைநீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. இந்த கோடையில் தாய்மார்கள் குடிநீருக்காக வெகுதூரம் செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிப்பு !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) May 6, 2024
குடிநீர் வழங்குவதிலும் குளறுபடி ! அலட்சியம் காட்டும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/gWUEGXfgXU
தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் திட்டங்களுக்கான மின்மோட்டார்கள் இயங்குவது 20 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் தேவை கூடுதலாக தேவைப்படும் இந்த கோடை காலத்தில், மின் மோட்டார்களை 22 மணி நேரமாக இயக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த விஷயத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டாமல், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.