விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயாராக இருப்பதாக கூறியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டிற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் கட்சிகள் இருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள், அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாகதான், அதிமுக - பாஜக கூட்டணி பற்றி திருமாவளவனுக்கு என்ன கவலை என்று விமர்சித்திருந்தார்.
அதே நேரம், அடுத்த சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவினர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தனர். அப்போதே திருமாவளவன், பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்று அறிவித்தார். இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டு அதிமுகவுடன் விசிக கூட்டணி அமைத்திருந்தது.
அந்த கூட்டணி ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில், திருமாவளவன் தொடர்ந்து திமுக உடன் பயணித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு மட்டும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த அவர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது வரை திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறார். இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை திமுகவிடம் இருந்து விசிக எதிர்பார்த்திருக்கிறது.
அதனை திருமாவளவன் ஸ்டாலின் முன்னிலையிலேயே கூறி இருக்கிறார்.
வடமாவட்டங்களில் விசிகவுக்கு ஆதரவு அதிகரித்திருக்கும் நிலையில், அவரை கூட்டணியில் இணைக்க அதிமுக நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு திருமாவளவனின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்