தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் கடந்த 2003-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில், ஏழை, எளிய மக்கள், பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற, ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வர முயல வேண்டாம் என்று அதிமுகவின் சார்பில் எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil