கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த அதிமுகவில், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர் திடீரென மரணமடைந்தார். அன்றுமுதல் தற்போதுவரை அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி விட்டது. ஆனாலும் அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
இதில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செய்லாளர்கள் கூட்டத்தில், கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கட்சியில் ஒற்றை தலைமை இல்லாததே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒற்றை தலைமை என்றால் யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து ஒபிஎஸ் இபிஎஸ் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில நாட்களாக தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகினறனர். இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயக்க வேண்டும் என்று கூறி ஒ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இயறங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வரும் 23-ந் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதேபோல் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் அதிகளவில் இருந்துள்ளனர்.
தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை முடித்த ஒபிஎஸ் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக பெரம்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மீது தாக்குதல் நத்தப்பட்டது. இதனால் முன்னாள் பகுதி செயலாளரான அவர், காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். அவர் வெளியில் வரும்போது ஜெயக்குமாருடன் வர நீ என்ன எடப்பாடி ஆளா என்று கேட்டு தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தியது கட்சியினர் அல்ல வெளிநபர்கள் என்றும் கட்சி அலுவலகத்தில் வெளிநபர்கள் புகுந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.