ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்றந அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன் கலந்துகொண்ட நிலையில், இந்த கூட்டத்தில் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த பிரவீன் என்பவர் கட்சி தொடர்பான எந்த தகவல்களும் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட அங்கிருந்த நிர்வாகிகள் அவருக்கு எதிராக கோஷம்போட்ட நிலையில், அவரை கீழே உட்காரமாறும் கூறியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து தனது தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரவீனை,, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று பிரவீன் மேடைக்கு சென்றபோது அங்கு பரபரப்பான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமாக அதிமுக நிர்வாகிகள் பலரும் பிரவீனை சராமரியாக தாக்க தொடங்கியுள்ளனர்.
இந்த மோதலின்போது கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும், நாற்காலிகளை எடுத்து வீசிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த நபருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், முன்னாள் எம்.எல்.ஏ அந்தியூர் ராஜா அவரின் தூண்டுதலின்பேரில் இந்த நபர் கட்சியில் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றபோது, அதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் படங்கள் இல்லாததால், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்கள் பட்டியலில், செங்கோட்டையன் பெயர் இல்லாத நிலையில், சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிலும் அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.