அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளி குறித்தும், மறு ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு என்பருக்கு எதிராக சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் குவிந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனததை பதிவு செய்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் மனிதர்களின் மறு ஜென்மம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பள்ளியில் இதுபோன்ற ஆன்மீகம் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியல் பணியிடடை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் மகா விஷ்ணுமீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனையடுத்து மகாவிஷ்ணு, மற்றும் அவரின் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்பான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நி்லையில், மகாவிஷ்ணுவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எங்களுக்கு கிடைத்த தகவலின் படியும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியின் படி ஒரு நபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அரசு உதவி பெரும் பள்ளியில் அந்த நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், எப்படி அவரை இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேச அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. அதிலும் ஒரு மாற்றுத்திறனாளி இது குறித்து கேட்டபோது, அவரை கொச்சைப்படுத்தி, இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அந்த நபர் குறிப்பிட்டது ஒரு மன வேதனையாக கடும் சொற்கள். மாற்றுத்திறனாளிளை மனிதநேயத்தோடு நடத்தவேண்டும். மனசாட்சியோடு பேச வேண்டும். மனசாட்சியோடு நடக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை செய்து கொடுத்தாலும், இப்படிப்பட்ட நபர்களால் அவர் மனம் காயப்படும் அளவுக்கு பேசுவது என்பது கண்டத்துக்குரியது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“