கூட்டணி முறிவுக்க பின் பா.ஜ.க. அதிமுக இடையே காரசாரமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.கவை ஐபில் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி அணியுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மத்தியில் பா.ஜ.க தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.
பா.ம.க, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க தமிழகத்தில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, பல தொகுதிகளில் 2-வது இடத்தையும், 3-வது இடத்தையும் பெற்றிருந்ததோடு, வாக்கு சதவீதத்தையும் உயர்த்தியது. அதே சமயம் தேமுதிக எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மேலும் பல தொகுதிகளில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பெற்றது.
இதனிடையே அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 தொகுதிகளுக்கு மேல் வென்றிருக்கும், என்று அதிமுகவின் எஸ்பி.வேலுமணி கூறியிருந்த நிலையில், நான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன்’ கூட்டணி இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆனாலும் இது கட்சிகளுக்கு இடையேயான விமர்சனங்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
அந்த வகையில் தந்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்துக்கொண்டிரக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைபோல்தான் பா.ஜ.க. ஆனால் அ.தி.மு.க சென்னை சூப்பர் கிங்ஸ் போன்றது. 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து பல வெற்றிகளை குவித்துள்ளோம். இனி வரும் தேர்தல்களில் வெற்றிகளை குவித்து வரலாற்று சாதனையை படைப்போம்.
பாஜகவினர் தமிழகத்திற்கு 8 முறை மோடியை அழைத்து வந்தார்கள். மறைந்த தலைவர் மூப்பனார் ராஜீவ் காந்தியை அழைத்து வந்தபோது, அவர்களுக்கு 23 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆனால் பிரதமர் 8 முறை தமிழகத்திற்கு வந்தும் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் அவர்கள் கூட்டணியில் இருந்த பா.ம.க தர்மபுரியில் வலுவாக இருந்தாலும் அங்கு அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மொத்தத்தில் பா.ஜ.க வளர்ச்சி என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.