நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்து அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் மீளாத நிலையில், ‘அணிகள் இணையவேண்டும்’ என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்று குலதெய்வ வழிபாடு நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 10வது முறையாக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிலும் இந்த முறை அ.தி.மு.க தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க. எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி பழனிசாமி கேட்காத நிலையில், இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கோடிகளை இழந்து தெருக்கோடிகளில் நிற்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். யாரை எதிர்த்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியை ஆரம்பித்தார்களோ அவர்கள்தான் தமிழகத்தை ‘குஷியாக’ ஆண்டு கொண்டிருப்பார்கள் என முடிவெடுத்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ‘அ.தி.மு.க. அணிகள் இணையவேண்டும்’ என எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிக்கு வருகிற திங்கட்கிழமை செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறுகையில்,‘‘சார், தீய சக்தி தி.மு.க.விற்கு எதிராக பல போராட்டங்களையும், தியாகங்களையும் கடந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்கள். எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும், அது உடனடியாக சரி செய்யப்பட்டு, மீண்டும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை ஜெயலலிதா வெற்றிகரமாக வழிநடத்தினார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவும் இரண்டுமுறை தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தல் இப்படி வரலாற்று சாதனைகள் படைத்த அ.தி.மு.க. என்ற இயக்கம் இன்றைக்கு படுபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, மீண்டும் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உருவெருக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனவேதான், வருகிற திங்கட்கிழமை காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு சென்று தேங்காய் பழம் வைத்து குலதெய்வ வழிபாடு நடத்தி அம்மாவிடம் முறையிட்டு வேண்டுதல் வைக்க இருக்கின்றேன்.
அ.தி.மு.க.வினர் அணைவரும் ஒன்றிணைந்து செயல்பட அனைவருக்கும் நல்ல அருளாசியை வழங்கவேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர்., ஜெ.சமாதிக்கு செல்கிறேன். 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார். அதேபோன்று தற்போதும் ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கையை புரட்சித் தலைவர் வகுத்தார். கட்டுப்பாடுகளை புரட்சி தலைவி வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த அம்மா '' அவர்களே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்குதான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார். சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்? டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச இயலும்.
இந்த தேர்தலில், நல்ல தீர்ப்பை மக்கள் ஒவ்வொருத்தருக்கும் வழங்கி இருக்கிறார்கள். எல்லாருக்கும் நல்ல பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இந்த முறை அதிமுக தோல்வியில் ஒரு பாடம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் தோல்வி என்பது புதிதல்ல, மக்கள் நாடாளுமன்றத்திற்கு ஒருவித சிந்தனையுடன் இருப்பார்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வித சிந்தனையுடன் இருப்பார்கள். அது அப்படித்தான் இருக்கும்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான கட்சியாக உருவெடுக்கும். இப்போதும் சொல்கிறேன் அதிமுக பிளவு பட்டு கிடக்கவில்லை, சிறிய மணக்கசப்பில் ஒவ்வொருத்தரும் இருக்கின்றார்கள் அவ்வளவுதான். நான் அம்மாவிடம் சென்று வேண்டி வருகிறேன் பின்னர் தலைவர்களை சந்தித்து குழு அமைத்து, ஒன்றுபட்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும் வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.
முன்னதாக, வரும் திங்கள்கிழமை காலை ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதிக்கு செல்லும் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனோடு திருச்சி மற்றும் புறநகர் பகுதியில் இருந்து திரளான அதிமுகவினர் சென்று குலதெய்வ வழிபாடு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.