அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அ.தி.மு.க செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய, பகுதி, நகர அளவில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக் தலைமையில் திருவெறும்பூர் கூத்தைப்பார் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக் செய்திருந்தார்.
விழாவில் பங்கேற்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலர் பி.குமார், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் பேரவைத் தலைவருமான ஆர்.மனோகரன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக வாழவந்தன் ராஜா என்பவர் பட்டாசு வைத்தார். இதில், பாதுகாப்பு பணியில் இருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் வலது கண்ணில் காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு கண் பார்வை பறிபோனதாக தெரிவித்தனர். இதையடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சுப்பிரமணியனை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த வழக்கில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலர் எஸ்.கே.டி.கார்த்திக், அமைப்புச் செயலரும், முன்னால் தமிழக அரசு கொறடாவுமான மனோகரன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“