தர்மபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைந்து போட்டியிட்ட அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது, குறிப்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதில் இருந்து அ.தி.மு.க தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி முதற்கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள தொகுதிகளில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் இன்று தர்மபுரி தொகுதியில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள அரங்கநாதன் – ரஞ்சிதம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர் கே.பி அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் தோ.மு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலில், தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி பேசிய, மாவட்ட இளம்பெண்கள் பாசறையின் செயலாளா சங்கர் பேசுகையில், மாவட்ட தலைவர் கே.பி.அன்பழகன், 1996-ம் ஆண்டு கட்சிக்குள் வந்தவர். ஆனால் நாங்கள் பரம்பரை பரம்பரையாக அதிமுகவில் இருந்து வருகிறோம். 96-ல் கட்சியில் சேர்ந்த அவர், அனைத்து பதவிகளையும் பொறுப்புகளையும் தன்வசம் வைத்துக்கொண்டார். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த கே.பி.அன்பழகன் நான் எப்போது கட்சிக்குள் வந்தேன் என்பதை மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள் என்று கூறியுள்ளார்.
மேலும் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சங்கரை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது சங்கரின் உறவினரும், மாவட்ட விவசாய பிரிவு அமைப்பு செயலாளருமான டி.ஆர்.அன்பழகன், சங்கருக்கு ஆதரவாக தனது கருத்தை கூறியுள்ளார். இதன் காரணமாக கே.பி. அன்பழகன் மற்றும் டி.ஆர்.அன்பழகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டுள்ளனர்.
இதனால் ஆலோசனை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தொண்டர்கள் எழுந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். அதன்பிறகு ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஆனாலும் கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசல் இந்த சம்பவத்தின் மூலம் வெளி வந்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“