கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் 20 செ.மீ அதிகமாக மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் (அக்டோபர் 16) சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வீடுகளில், தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் யோசித்துக்கொண்டிருந்த நிலையில், அன்றைய தினம் மழை பெய்யாமல் போனது மக்களுக்கு நிம்மதியாக இருந்தது. அதன்பிறகு நேற்றும் (அக்டோபர் 17) மழை இல்லாததால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை டி.நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த இரு தினங்களாக மழை இல்லாத நிலையில், இன்று காற்றுடன் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
இதில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வரும் ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“