த.இ.தாகூர். குமரி மாவட்டம்
தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,
மழை வருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு தமிழக அரசு செயல் பட்டு இருந்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைத்து இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை வருவதற்கு முன்பாகவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்களின் துன்பத்தை குறைத்து இருக்க முடியும் அதை இந்த அரசு தவறிவிட்டது.
தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தவரையில் தமிழக அரசால் மீட்பு பணி துவங்கப்படவில்லை. இனியாவது துவங்குவார்களா என தெரியாது. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்தபோது அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை, உணவு குடிநீர் குழந்தைகளுக்கு பால் போன்றவை கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என எச்சரித்து இருந்த நிலையில் தமிழக அரசு வேகமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பொதுமக்கள் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார்கள். டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை பார்க்க செல்லவில்லை இந்தியா கூட்டணி கூட்டத்திற்காக சென்றபோது பிரதமரை சந்தித்துள்ளார்.
சென்னையில் மிக்சாம் புயலை ஒட்டி கனமழை பெய்த நிலையில் மூன்று நாட்களாக தண்ணீர் அகற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு பால் போன்றவை இல்லாமல் கஷ்டப்பட்டனர்.ஆனால் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு 6230 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் எந்தெந்த துறையில் எவ்வளவு சேதம் என்பதை ஆய்வு செய்யாமல் விளம்பரத்திற்காக நாடாளுமன்றத்தில் பேசி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
தமிழக அரசு நிவாரணத் தொகை பெற வேண்டும் என்றால் கனமழைக்கு பின்பு ஒவ்வொரு துறை வாரியாக சேதம் மதிப்பை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு நிவாரணம் கேட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“