அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக சட்டசபையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பி.எஸ் தரப்பும் செல்லும் என்று அறிவிக்க கோரி இ.பி.எஸ் தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு பிப்ரவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று அறிவித்து ஒ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு இ.பி.எஸ் தரப்பினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இ.பி.எஸ்.க்கு சாதகமாக வந்துவிட்ட நிலையில், ஒ.பி.எஸ் நிரந்தரமாக அதிமுகவை விட்டு நீக்கியது செல்லும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அதிமுகவில் இருந்து துணை எதிர்கட்சி தலைவராக இருந்த ஒ.பிஎஸ் நீக்கப்பட்டார் என்று அவரது இருக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்க்கு சாதமாக வந்துவிட்டதால் சட்டசபையில் இருக்கை மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த சபாநயகர் அப்பாவுவிடம் சட்டமன்றத்தில் இருக்கை மாற்றியமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நீதிமன்ற தீர்ப்புக்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இன்னும் பல பிரச்சனைகள் உள்ளது. இதில் நாம் செல்ல வேண்டாம்.
அதேபோல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் அல்லது சட்டமன்றம் நடைமுறைப்படுத்துவது அனைத்தும் சட்டப்பேரவை தலைவரின் முழு பொறுப்பு. ஆகவே நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil