அ.தி.மு.க.வில் வரும் மார்ச் 26-ந் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்காக வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்கும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக அதிமுகவில் தலைமை குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஒ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்தது. இதனிடையே வரும் மார்ச் 26-ந் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்றும், நாளை (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கட்சியில் தலைமை அறிவித்துள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மார்ச் 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 19-ந் தேதி நிறைவடையும் என்றும், மார்ச் 20-ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். மார்ச் 21-ந் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். மார்ச் 26-ந்’ தேதி வாக்குப்பதி நடைபெற்று 27-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ரூ 25000 பணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“