அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இ.பி.எஸ் அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து, இபிஎஸ் தலைமையில் 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சட்டபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது.
கட்சியின் ஒற்றை தலைமை யார் என்பதில் ஒபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் வெடித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இ.பி.எஸ் ஒருமனதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒபிஎஸ் தொடரப்பட்ட வழங்கில் இரு தரப்புக்கும் மாறி மாறி சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறிய நீதிமன்றம் ஒபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் அதிமுக அலுவலகம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதன் மூலம் அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக 1972 முதல் 86 வரை 2 முறை அதிமுகவின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனைத் தொடர்ந்து வி.ஆர்.நெடுஞ்செழியன் 1978-80 மற்றும் 1988-89 வரை 3 வருடங்கள் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார்.
அதன்பிறகு 1980 முதல் 1985 வரை பி.யூ.சண்முகம், 1985 முதல் 86 வரை ரகுவநந்தன், 1989 முதல் 2016-வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 முதல் 2017 வரை வி.கே. சசிகலா ஆகியோர் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியில் இருந்துள்ள நிலையில், தற்போது 8-வது நபராக எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.