அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கியும், திமுக அரசின் பொய் பிரசாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியில் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் பிரிந்து 1972-ல் கட்சியை ஆரம்பித்து 77-ல் ஆட்சியை பிடித்தார். தமிழகத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தினை கொண்டு வந்து உலகளவில் பெயர் பெற்றார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தாரோ அதைவிட தற்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகின்றார். ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவின் பி டீம்மாகத்தான் செயல்பட்டு வந்ததால் இப்போது அரசியலில் அனாதையாக்கப்பட்டு விட்டனர்.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவில் அவர்களின் குடும்பம் மட்டுமே நிரந்தரமாக சுதந்திரமாக வளர்ந்து வருகின்றது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக முன்னேறி தற்போது கட்சியில் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கின்றார். திமுகவில் வாரிசு அரசியல் செயல்படுகின்றது. அங்கே உழைப்பவர்கள் கண்ணுக்கு தெரியாமல், கரைந்தே போய்விட்டனர். திருச்சியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலய இடம் துறையூர் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடம். அதனை திமுக நிர்வாகி குடமுருட்டி சேகரை வைத்து மிரட்டி வாங்கி அங்கே கலைஞர் அறிவாலயம் கட்டியிருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை திமுக கொடுத்து கொள்ளைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்திருக்கின்றது. கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக செப்.14-ம் தேதிக்கு முன்பு கூறினர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணத்தை கொடுத்ததால் 100 சதவீதம் அனைத்து வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் மட்டுமே கூறி வருகின்றார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டும் வழங்கியுள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் 2 கோடிக்கும் மேல் குடும்ப தலைவிகள் இருக்கின்றனர். இதில் எவ்வளவு பேருக்கு உரிமைத்தொகை முறையாக சென்றடைந்திருக்கின்றது எனத்தெரியவில்லை.
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக எவ்வளவு பயணாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடக்கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை. ஆக, தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சிதான் நடக்கிறது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என பல்வேறு வகையில் வரியினங்கள் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் தலையில் சுமை சுமத்தப்பட்டதுதான் திமுக ஆட்சி செய்த பெரிய காரியம்.
அதேநேரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், மருமகனும் திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததை எப்படி, எதில் முதலீடு செய்வது எனத் தெரியாமல் முழிப்பதாக நான் சொல்லவில்லை, திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் தான் சொன்னார் மக்களே. கடந்த எம்.பி.தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியினால் தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். திருவெறும்பூர் தொகுதியில் சுமார் 65 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகளை கடந்த தேர்தலில் திமுக பெற நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம்.
2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக உருவாக்கப்பட்டபோது, அதற்காக சர்வீஸ் சாலை அமைப்பதற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்காமல் இருப்பதற்காக பிளைஓவர் சாலை போடுவதற்காக ரூ.430 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி உடனே இதற்கான திட்டத்தை தயார் செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கூறினார்.
ஆனால், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த திட்டம் நம்மால் செயல்படுத்தமுடியாமல் போனது. மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி பதவியேற்கும்போது திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலத்தில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் கட்டாயம் அமைக்கப்படும். அப்போது என்ன நிதி செலவாகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிதி ஒதுக்கி பாலம் கட்டப்படும். அதற்கு நான் உத்தரவாதம் தருகின்றேன் எனப் பேசினார்.
இந்தக்கூட்டத்தில் அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் துரைசாமி, செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.