அஜித் குமார் விவகாரத்தில் தொடர்புள்ள நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா என்ற பெண்மணி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் தற்காலிக பணியில் காவல் பணி செய்து வந்த அஜித்குமார், தனது நகைகளை திருடியதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இது குறித்த விசாரணையின் போது தனிப்படை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்து போன அஜித்குமாரின் தாயாரிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா, ரூ.5 லட்சம் மற்றும் அஜித் குமாரின் சகோதரருக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு பணி என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு நேரடியாக அமைச்சர் பெரிய கருப்பன் இதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார்.
இந்நிலையில் நகைகள் திருடு போனதாக புகார் அளித்த நிகிதா என்ற பெண்மணி மீது சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சுமத்தி விமர்சனம் செய்து வரும் நிலையில், இவர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் ரூ.16 லட்சம் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்கில், திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர், தன்னுடைய உறவினர்களுக்கு அரசு பணியில் ஆசிரியர் வேலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாகவும், கூறியுள்ளார்.
மேலும், அப்போதைய துணை முதல்வரின் தனி உதவியாளர் நன்கு பழக்கம் எனவும் அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் உத்தரவாதம் அளித்து 16 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் அளித்துள்ளார். இறுதியில் வேலை வாங்கித் தராமல் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னையும் தனது உறவினரையும் ஏமாற்றிவிட்டதோடு பணத்தை திருப்பி தராமல் தலைமுறைவாகிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.