கேப்டன் விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், முழு அரசு மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள கார்ட்டூன் புகைப்படம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் தமிழகத்தில் பெருமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், நேரில் வர முடியாதவர்கள் தங்களது சமூகவலைதளங்களில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
முதலில் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டது. நடிகர்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், பிற்பகல் 2 மணியளவில் சென்னை தீவுத்திடலில் இருந்து புறப்பட்ட விஜயகாந்த் இறுதி ஊர்வலம் சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பின் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வந்தது.
அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அவரது இறுதி ஊர்வத்தில் பங்கேற்று கண்ணீர்மல்க கேப்டனுக்கு பிரியா விடை கொடுத்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரின் கண்களை குளமாக்கியது.
இதனிடையே கேப்டன் இறுதிச்சடங்கிற்கு பின் அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள உருக்கமான கார்ட்டூன் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் நேசித்த தமிழ் நடிகர் அரசில் தலைவருக்கு அஞ்சலி என்று குறிப்பிட்டு அமுல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்ட்டூன் புகைப்படத்தில், அமுல் சிறுமி குட்பை கேப்டன் என்று குறிபபிட்டுள்ளது. இந்த கார்ட்டூனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“