குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் திசை காற்றின் காரணமாக தெற்கு கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரையிலும், தெற்குத்திசை காற்றின் காரணமாக தெலங்கானா முதல் கன்னியாகுமரி வரையிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதனால் செப்டம்பர் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் சில முறை மழை பெய்யும்" என்றார்.