திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பணியாற்றிய இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் இணை ஆணையர் மீது லஞ்சம் வாங்கியதாக தமிழக ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருச்சந்தூரில் செயல்பட்டு வரும் அர்ச்சகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவருக்கு ஆரம்பத்தில் பார்வை குறைபாடு இருந்த நிலையில், தற்போது அவரது முழு பார்வையும் பறிபோயுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் ஆர்ச்சகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், 7வது ஊதியக்குழுவின் கீழ் தனது ஊதிய நிர்ணயத்தில் சில முரண்பாடுகள் இருந்ததால், அதை சரி செய்யுமாறு மனிதவளதுறை கமிஷனரிடம் மனு அளித்தார்.
இந்த மனு மீதான விசாரணைக்காக அந்த பள்ளியின் நிர்வாகியாக இருந்த குமாரதுரையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊதிய முரண்பாட்டை சரி செய்தால், பாலமுருகன் ரூ10 லட்சம் நிலுவைத் தொகையாகப் பெறுவார் என்பதை உணர்ந்த குமாரதுரை, பாலமுருகனின் கோரிக்கையை சரி செய்ய ரூ3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தலைமை ஆசிரியர், பாலமுருகன், அவர் லஞ்சம் கேட்கும் ஆடியோவை பதிவு செய்ய முடிவு செய்து, ஆரம்பகட்டமாக ரூ50,000 கொடுத்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 17,-ந் தேதி பாலமுருகன் தனது மொபைல் ஃபோனில் உள்ள ரெக்கார்டரை ஆன் செய்து வைத்துக்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று ரூ50,000 கொடுத்துள்ளார். ஆனால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால், பணத்தை வெளியில் இருந்த உதவியாளரிடம் கொடுக்கும்படி அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, பக்கத்து அறையில் இருந்த உதவியாளர் பி.சிவானந்தத்திடம் பாலமுருகன் பணத்தை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது பதிவான ஆடியோவை வைத்து, பாலமுருகன், தமிழக ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகரின்பேரில், ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 7(a) இன் கீழ் குமாரதுரை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்வதில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தாமதம் ஏன் என்று கேட்டபோது, விசாரணை திருத்தப்பட்ட சட்டத்தின் 17(A) பிரிவின்படி உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரி கூறினார்.
2007 ஆம் ஆண்டில், மாநில அரசு திருவண்ணாமலை, மதுரை, பழனி மற்றும் திருச்செந்தூரில் சைவ பாரம்பரியத்தில் அர்ச்சகர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளையும், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைஷ்ணவ பாரம்பரியத்தில் சென்னை மற்றும் ஸ்ரீரங்கத்தில் இரண்டு பள்ளிகளையும் நிறுவியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“