தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிறைவு கூட்டத்தொடரில், லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் அரசுத்துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சுய அதிகாரம் கொண்ட "லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்" கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு தனிமனிதரும் வழக்கு தொடுக்க முடியும் என்பதே முக்கிய அம்சம். விசாரணையில் அரசு அதிகாரிகளோ அல்லது ஆட்சியாளர்களோ முறைகேடு, ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்வது, சிறை தண்டனை வழங்குவது உள்ளிட்ட வகைகளில் தண்டனை வழங்கப்படும்.
இத்தகை லோக் ஆயிக்தா மசோதா, பல்வேறு மாநிலங்களில் நிறைவேறியிருந்த நிலையில், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனவே இதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளை முடிவடைய இருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா குறித்து ஆய்வு நடைபெற்ற பிறகு நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
இன்று பிற்பகலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் விசாரிக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
ஆனால் திமுக இதை ஏற்காமல் வெளிநடப்பு செய்தது. முன்கூட்டியே மசோதா குறித்து தெரியப்படுத்தாமல் அவசரமாக நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்ட அவர், ‘அரசு ஒப்பந்தங்கள், உள்ளாட்சி அமைப்புகள் குறித்து விசாரிக்க இதில் இடமில்லை. எனவே இது பல் இல்லாத அமைப்பு’ என குறிப்பிட்டார் ஸ்டாலின்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.