தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஈபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், யார் உண்மையான அதிமுக என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மை எங்களுக்கு தான் உள்ளது நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஈபிஎஸ் தரப்பு கூறி வருகின்றது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மாண்புமிகு நமது முதல்வர் அவர்கள் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதம் இன்றி ஒருமனதாக ஏகமனதாக நிறைவேற்றியிருக்கலாம் என்ற கருத்தினை நான் பதிவு செய்கிறேன்.
இது குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கொண்டு வந்த இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முழுமையாக நாங்கள வரவேற்று அமர்கின்றோம் என்று பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டும் என்ற அடிப்படையில் நீங்கள் பேச அழைத்தீர்கள். அதிமுக எங்கள் அணிதான் நான் தான் எதிர்கட்சி தலைவராக இருக்கின்றேன். எங்களின் சார்பான தளவாய் சுந்தரம் பேசினார்.

அதன்பிறகு மறுபடியும் இப்படி பேச விட்டால் என்ன இது எந்த விவதத்தில் இருக்கிறது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். என்று எடப்பாடி பழனிச்சாமி பேச மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதை இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு அவர்களை அமர சொல்லுங்கள் உங்களது சந்தேகங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவர் பேசுவதற்கு அனுமதி கேட்டார் அதனால் கொடுக்கப்பட்டது. நீங்கள் பேசக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத ஈபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் அனைத்தும் நடக்கிறது என்று சொல்லி மீண்டும் கூச்சலிட தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் நீங்கள் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். நீங்கள் உங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இது முக்கியமான ஒரு மசோதா. இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஈபிஎஸ் ஒபிஎஸ் தரப்பினர் கூச்சலிட்டனர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதலின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த சாமி மற்றும் ஒ.பி.எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகிய இருவருக்கும் மோதல் பெரிய அளவில் இருந்தது. இருவரும் இருக்ககையை விட்டு எழுந்து நின்று சத்தம்போட்டி நிலையில், தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கையை பிடித்து இழுத்து ஒ.பி.எஸ் தடுத்தார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/