2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில், இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
குறிப்பாக அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை. இதன் காரணமாக கடைக்கோடி மக்களுக்கும் நல்வாழ்வு என்ற முக்கிய திட்டத்துடன் தமிழக அரசு, இந்த பட்ஜெட் அறிக்கை தயார் செய்துள்ளது. இதன் மூலம் 2030-ல் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கன்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 2024-25-ம் நிதி ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ளலாம். ஒரு வீட்டுக்கு ரூ3.5 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2024-2025 நிதியாண்டில் ஒவ்வொரு திட்டத்திற்காக பட்ஜெட் விபரம்
முதல்வரின் காலை உணவுத்திட்டம் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக ரூ600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மகளிர் பணியாளர்களுக்காக தோழி விடுதிகள் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் ரூ26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதே போல் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டத்திற்காக ரூ1100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15000 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளை உருவாக்கும் திட்டத்திற்காக ரூ300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக ரூ100 கோடி, பள்ளிகட்டமைப்பை மேம்படுத்த ரூ1000 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ2700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில், பொது கழிப்பிடங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ430 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வு பயிற்சிகளை அளிக்கும் திட்டத்திற்காக ரூ6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மத்திய பணியார் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 1000 பேருக்கு 6 மாத காலம் உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
சென்னையில், வட சென்னை வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ1000 கோடி, வைகை, காவேரி, நொய்யல், மற்றும் தாமிரபரணி ஆறுகளை ஒட்டிப பகுதிகளை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் அமைக்கப்பட உள்ளது.
திருச்சி மதுரை கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக விரிவான திட்டங்களை தயார் செய்ய ரூ5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழடியில், திறந்தவெளி அரங்கம் அமைப்பதற்காக திட்டத்திற்காக ரூ17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வகையில், நாமக்கல் ரூ358 கோடி, திண்டுக்கல் ரூ565 கோடி, பெரம்பலூர் ரூ366 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக 2,483 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறைக்கு ரூ8,398 கோடியும், கல்லணை காய்வாய் புனரமைக்கும் திட்டத்திற்காக ரூ400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அதேபோல் ஜெர்மன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு நடப்பு நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
கலைஞர் கொண்டுவந்த சிற்றுருந்து திட்டம் தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும். மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்காக ரூ3050 கோடி, மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில், ரூ1521 கோடி, அரசு பேருந்து டீசல் மானியத்திற்காக ரூ1500 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக ரூ63246 கோடி செலவில், 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக மேலும் ரூ12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை அவினாசி மற்றும் சத்திமங்கலம் சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ10740 கோடி, மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தடை பகுதிகளை இணைத்திடும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ11308 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டு இது குறித்து தாயரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளரங்களை புனரமைக்கும் திட்டத்திற்காக ரூ500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ25,858 கோடியும், தூத்துக்குடியில் வின்வெளி பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக ரூ2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ராமநாதபுரத்தில் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கும் திட்டத்திற்காக ரூ440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.