தமிழகத்தில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 2-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமரவுள்ளார். இது தொடர்பாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ராஜ்பவனில் தமிழக ஆளுநரை சந்தித்த மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வரும் 7-ந் தேதி (நாளை மறுநாள் ) காலை 9-மணிக்கு ஆளுநர் மாளிகைளில் எளிமையான முறையில் பதவியேற்பு விமா நடைபெறவுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி, திமுகவின் புதிய அமைச்சரவையில், சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று உறுதியாக உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், அனுபவம் மற்றும் இளம் எம்எல்ஏக்கள் கொண்ட அமைச்சரவை பட்டியலை தயார் செய்துள்ளதாகவும், சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் சபாநாயகர் பதவியைக் கொடுக்கவும் ஸ்டாலின் முடிவு செய்திருந்த்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டதால், அந்த பதிவிக்கு யாரை தேர்வு செய்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
மற்றபடி, அமைச்சரைவையில் புதுமுகங்களாக மா.சுப்ரமணியன், டி.ஆர்.பி.ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், அன்பில் மகேஷ், பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், ஆவடி நாசர், சேகர்பாபு ஆகியோர் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, ஆகியோர் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் திமுக அமைச்சரவையில் அனுபவம் மற்றும் புதுமுகம் என சரிசமமாக இருக்கும் அளவிற்கு அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போதுவரை சேப்பாக்கத்தில் வெற்றி பெற்ற இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் பெயர் அமைச்சரவை பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் தற்போது படங்களில் நடித்து வருவதால், `அமைச்சரவையில் இப்போது சேர்க்க வேண்டாம், பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil