TN Assembly Election 2021 : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், சசிகலா, கமல், சீமான் ஆகியோரது தலைமையில் 3-வது அணி உருவாகுமா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா சென்னை வந்தடைந்தார். அவர் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சசிகலாவை ச்ந்தித்துள்ளனர். இதனால் 3-வது அணி ஒருவாகும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், நேற்று சசிகலாவை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இன்று திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சரத்குமார் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார் அடுத்து, சீமான், கமல் ஆகியோருடன் கூட்டணி சேருவாரா? அல்லது சசிகலாவுடன் இணைந்து 3வது அணியை உருவாக்குவரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. இதனால் தற்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சி, இதுவரை அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
இது குறித்து சரத்குமார் கூறுகையில், சமக ஐஜேகே கூட்டணியில் சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் இணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வரும் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள திமுகவில், கூட்டணிகட்சி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்று நிர்பந்தித்தததால், கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து கூறுகையில் தற்போது புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் 3-வது அணி உருவாகியுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"