TN Assembly Election Extra Time For Voting : தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
தொடர்ந்து தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்கள், சுசில் சந்திரா ராஜீவ் குமார், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிமுக தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறுகையில்,
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளன. மேலும் வாக்குப்பதிவு முடிந்து ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பிற மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுவதால் தமிழகத்தில் விரைவில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது சாத்தியமற்றது என்று தெரிவித்ததாகவும் கூறியள்ளார். மேலும் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையர் கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டி இருப்பதால் தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் எப்போதும் போல் வரும் தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளோம். தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், புதிதாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.