Vanniyer Reservation in Tamilnadu ; தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் கலைகட்ட தொடங்கியது. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 20% உள்இடஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.
ஆனால் தமிழக அரசு சார்பில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டால் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அதிமுக அமைச்சர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட தொண்டர்கள் அதிமுக அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சவார்த்தை குறித்து அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், பாமக அதிமுக கூட்டணியில் தொடருமா? அல்லது இடஒதுக்கீட்டை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகுமா என்பது குறித்து பெரும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பாமக சார்பில் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாமக அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிச்சாமி வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாமகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த இடஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, 10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடஒதுக்கீடு கிடைத்த செய்தியை அறிந்த பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், உணர்ச்சிப்பெருக்கில், தனது தந்தையான ராமதாஸிடம் போன் செய்து அழுதுகொண்டே பேசியள்ளார். அவர் பேசும்போது நாற்பது வருஷ உழைப்பு, இப்போதுதான் 10 சதவீதம் கொடுத்திருக்காங்க எவ்வளவு தியாகம் செஞ்சோம். இருக்கட்டும் விடுங்க.. அப்புறம் நிறைய கேட்டு வாங்கிகலாம் என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"