தமிழ்நாடு சட்டமன்றம் ஆளுனர் உரைக்காக ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது. டிடிவி தினகரன் முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அதன்படி கடைசியாக இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் அடுத்த கூட்டம் 2018 புத்தாண்டில் ஜனவரி மாதம் 8-ம் தேதி கூட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (டிசம்பர் 28) வெளியானது. சட்டமன்ற செயலாளர் பூபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தில் ஆளுனர் உரை நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் முதலாவது கூட்டம் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித்-தின் உரையுடன் தொடங்குகிறது. முதலாவது நாளில் ஆளுனர் சட்டமன்றம் வந்து உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி கவர்னர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது? முக்கிய விவாதங்கள் இடம்பெறுவது குறித்து முடிவெடுக்கும்.
ஆளுனர் உரை மீதான விவாதத்தில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். முடிவில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவார். அதன் பிறகு முதல்-அமைச்சர் நிறைவு உரையாற்றுவார். தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பங்கேற்கும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுனர் உரை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உரை தயாரானதும் ஆளுனர் அதற்கு இறுதி வடிவம் அளிப்பார். தேவைப்பட்டால் திருத்தங்கள் மேற்கொள்வார். வழக்கமாக அரசு வழங்கும் உரைகளை ஆளுனர்கள் அப்படியே ஏற்பது வழக்கம். ஆனால் பன்வாரிலால் புரோகித் சுயமாக செயல்படுகிறவர். அதனால் உரையை தயாரிக்கும் அதிகாரிகளே பதற்றத்தில் இருக்கிறார்கள்.
தமிழக அரசின் சாதனைகள், வளர்ச்சித் திட்டப்பணிகள் எதிர்கால திட்டங்கள் கவர்னர் உரையில் இடம் பெற்று இருக்கும். கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பின்பு கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் குறைகளையும் கேட்டார்.
கவர்னரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சட்டசபைக்கு கவர்னர் உரை நிகழ்த்த வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் சமீபத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டி.டி. வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக முதல் முறையாக கலந்து கொள்கிறார். ஏற்கனவே எம்.பி. பதவி வகித்துள்ள அவர் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் 18 எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாது.
18 எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு முழு மெஜாரிட்டியுடன் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த கூட்டத் தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பிளவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அ.தி.மு.க.வும் அவர்கள் வசம் ஆனது. இதனால் டி.டி.வி.தினகரன் கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலையில் சுயேச்சையாக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தினகரன் வரும்போது அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை எதிர் எதிரே சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
அப்போது தேர்தல் பகையை மறந்து நட்பு பாராட்டுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. சார்பில் இருந்தும் கவர்னர் உரை மீது காரசார விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.