scorecardresearch

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு; ஆளுநர் உரையில் முதல்வருக்கு பாராட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது; ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

Tamilnadu assembly Governor speech highlights: கொரோனா தொற்று கட்டுப்படுத்தலை சிறப்பாக கையாண்டதற்காக தமிழக முதல்வருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  வணக்கம் என தமிழில் சொல்லி உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன்பின்னர், தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பதவியேற்றது முதல் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் முடுக்கிவிட்டு கொரோனா இரண்டாவது அலையை திறம்பட கையாண்டதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். மாநிலத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்படையாமல் கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி நாட்டிற்கே முன்னோடி அரசாக இந்த அரசு உள்ளது.

இந்த அரசின் சீரிய முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் 8.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 86.95 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60.71 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது. 

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான்.

ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.  

’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் ரூ. 257 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சாலை விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்க இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் – 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. மேலும், இனி வரும் காலங்களில் சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1297 கோடியில் 2.15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்குகிறது.

ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறையை ஜூன் மாதத்துக்குள் நிறுத்திவிடும். இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தர வேண்டும்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கொரோனா இடருக்கு மத்தியில் குறுகிய காலத்தில், தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்த முனையும் முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வழியில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் காக்கப்படும்.

இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2.29 லட்சம் மனுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க, முதல்வரின் முகவரி என்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது; இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது. இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

1,74,999 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.66,230 கோடி முதலீட்டுக்கு 109 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்ட குடியிருப்புகளை பராமரிக்க நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

நெகிழிப்பைகள் பயன்பாட்டை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குவாரிகள் நடத்த தடை விதிக்கப்படும். கீழடி, ஆதிச்சநல்லூர் இடங்களில் கிடைத்த தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு. வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.

கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும். கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும். சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly governor speech highlights