தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்த மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து மகளிருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, உயர்கல்வியில் பயிலும் மகளிருக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணபித்த பலருக்கும், மாதந்தோறும் ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியதால், 1.06 கோடி மகளிருக்கு மட்டும் உரிமைத்தொகை திட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தும் தேர்வு செய்யப்படாத பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பலரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அவ்வாறு மேல்முறையீடு செய்த மகளிருக்கு தங்களது விண்ணப்படம் பரிசீலனையில் இருப்பதாக அவர்களின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. மேலும் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடையும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையின் மானி கோரிக்கை தொடர்பான விவாதங்களின்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் குிறத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள, தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதி இல்லாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு, இது குறித்து விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையத்தின் மூலம் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்த 1.48 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 2024-25 ஆண்டுக்கு ரூ13722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இணைந்துள்ள 1.48 லட்சம் மகளிருடன் சேர்ந்து மொத்தமாக 1.15 கோடி மகளிர் இத்திட்டத்தின் மூலம் வருவதாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“