பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

Tamilnadu assembly highlights DA for Govt employees, Welfare association for reporters: பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் எழுதுகோல் விருது, காரைக்குடியில் புதிய சட்டக் கல்லூரி; சட்டப்பேரவை இன்றைய முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை, செய்தித்துறை மற்றும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அகவிலைப்படி உயர்வு

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.  மேலும், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

விநாயகர் சிலை செய்பவர்களுக்கு ரூ.10000 நிவாரணம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படையும் மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் விநாயகர் சிலை செய்பவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும்.

பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அமைக்கப்படும்.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

வடசென்னையில் 2 லட்சத்து 38 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடியில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும். 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மற்றும் 2000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும்.

ரூ. 12.5 கோடி மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தல் மற்றும் ரூ. 679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். 

ரூ. 50 கோடி மதிப்பீட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பலை வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும்.

செய்தித்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…

பத்திரிக்கையாளர் நலவாரியம்

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மொழித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.  மேலும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும்

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

கலைஞர் எழுதுகோல் விருது

சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்.

அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்.

அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புனரமைக்கப்படும். சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.

தலைவர்களுக்கு சிலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும்.

ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்.

கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும்.

கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.

இந்தி திணிப்பை எதிர்த்து முதலில் உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகி கீழபழுவூர் சின்னசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

தலைசிறந்த இலக்கியவாதியும், முன்னாள் நிதி அமைச்சருமான மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்குச் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

பெண் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்க மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு மயிலாடுதுறையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், தமிழ்நாட்டின்  சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

இந்தியத் திருநாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்குத்  திருப்பூர் மாவட்டத்தில் திருவுருவச்சிலையும்  அரங்கமும் அமைக்கப்படும்.

பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் “சி.சுப்பிரமணியம் வளாகம்”  என்று பெயர் சூட்டப்படும்.

முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில்  திருவுருவச் சிலையுடன்  அரங்கம் அமைக்கப்படும்.

காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி

சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். அதில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly highlights da for govt employees welfare association for reporters

Next Story
110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டுகிறாரா ஜெகத்ரட்சகன்? பாஜக புகார் மனுBjp complaint against DMK MP Jagathrachagan, former minister s jagathratchagan, Panchami land issue, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், ஜெகத்ரட்சகன் மீது பஞ்சமி நிலம் வைத்துள்ளதாக புகார், பாஜக, தடா பெரியசாமி, விழுப்புரம் மாவட்டம், பஞ்சமி நிலம் விவகாரம், villupuram district, bjp, thada periyasamy, tamil nadu, dalit land issue, panchami land
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com